தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: கைதான நபருக்கு மாவு கட்டு - நடந்தது என்ன? - ANNA UNIVERSITY ISSUE

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றதால், கீழே விழுந்து இடது கால் இடது கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம், கைது செய்யப்பட்ட நபர்
அண்ணா பல்கலைக்கழகம், கைது செய்யப்பட்ட நபர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 10:51 AM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய நபரை கைது செய்த போலீசார், இடது கை மற்றும் இடது காலில் மாவு கட்டுப் போட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜனவரி 8ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது:

அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும், தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில், ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதேபோன்று 2011ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதானதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் வெடிக்கத் துவங்கியது. அதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டங்களையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் போராட்டம்:

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கை மூடி மறைக்கக் கூடாது எனவும், சமூக நீதி மண்ணில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா எனவும் காவல்துறையினரைக் கண்டித்து அனைத்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முழு விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில், 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட SFI மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)

மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்:

மேலும், "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து மாணவ மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தெரித்துள்ளனர்.

ஞானசேகரனின் பரபரப்பு பின்னணி:

பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான நபர் குறித்து பின்னணியை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் நடைபாதை பிரியாணி கடை வைத்து நடத்தி வருவது தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலை வளாகத்தில், சம்பவம் நடந்த இடத்தில் எத்தனை செல்போன் எண்கள் பதிவாகியுள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நடத்திய ஆய்விலும், பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஞானசேகரன் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் ஒருவர் மட்டும்தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாராவது உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ள போலீசார், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக குழுவினரும், காவல்துறையினரும் இணைந்து குழுவாக செயல்படுவார்கள் என்றும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளையும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

வீடியோ எடுத்து மிரட்டிய அம்பலம்: இவர் மீது, கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த அன்று பிரியாணி கடையை மூடிவிட்டு, அண்ணா பல்கலை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் தனியாக இருந்த மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை வீடியோ எடுத்து அவர்களிடம் காட்டி மிரட்டி இதனை உங்கள் பெற்றோர்களிடம் காண்பித்து விடுவேன் எனக் கூறி அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபரை போலீசில் காட்டிக் கொடுத்த உடன்பிறப்பு!

இதுபோன்று தனிமையில் இருக்கும் நபர்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை இவர் வாடிக்கையாக செய்து வந்ததாகவும், காதலர்கள் என்பதால் வெளியே சொல்ல மாட்டார்கள் என துணிச்சலாக இந்த செயலில் ஈடுபட்டதாக ஞானசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரது செல்போனில் பலரது ஆபாச வீடியோக்கள் இருந்ததால், பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களது விவரங்களையும் திரட்டி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைதான நபரின் கை, காலில் மாவு கட்டு:

கைது செய்யப்பட்ட ஞானசேகரனை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது காவல்துறை பிடியிலிருந்து தப்ப முயன்றதாகவும், அதில் கீழே விழுந்த ஞானசேகரினின் இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைதான நபருக்கு மாவு கட்டு போட்டுள்ள காட்சி (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், இன்று (டிச.26) காலை 6 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள 11வது அமர்வில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர்ம் வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது, ஞானசேகரன் சென்னை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின், அவரை புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details