புதுடெல்லி:இலங்கையின் காவலில் இப்போது 141 மீனவர்கள் உள்ளதாகவும், அவர்களில் 45 மீனவர்கள் மீது உள்ள வழக்குகளின் விசாரணை நடைபெற்றுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்ளவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், " இலங்கை அரசிடம் தொடர்ச்சியான தூதரக தொடர்புகள் மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வாயிலாக அந்த நாட்டில் காவலில் இருந்த 351 மீனவர்கள் இந்த ஆண்டு மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் எல்லைக்கு அப்பால் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்கின்றனர்.
தற்போது மத்திய அரசிடம் உள்ள தகவல்களின் படி இந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி வரை இலங்கையில் காவலில் 141 இந்திய மீனவர்கள் உள்ளனர். இதில் 45 மீனவர்கள் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன. 96 மீனவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு கொழும்ப, யாழ்பாணம் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சட்டரீதியான உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் தூதரக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக 351 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 12 மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களும் விரைவில் நாடு திரும்புவார்கள்.
இதையும் படிங்க:"பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது": முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!
இந்திய மீனவர்களின் நலனில், அவர்களின் பாதுகாப்பில் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தை இந்திய அரசு அளித்து வருகிறது. விரைவில் மீனவர்கள், அவர்களின் படகுகளையும் விடுவித்து, மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவது உள்ளிட்ட மீனவர்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்களிடம் இந்தியா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்ர் இலங்கையின் புதிய அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய மீனவர்களை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மீன் வளத்துறை தொடர்பான இருதரப்பு உறவுகளுக்கு இடையேயான இணை பணிக்குழுவின் கூட்டத்தில் தொடர்ச்சியாக மீனவர்கள் தொடர்பான வரம்புக்கு உட்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இணை பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது மீனவர்கள் விவகாரம் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இலங்கை அரசின் அனைத்து மட்டத்திலும் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது," என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்