சென்னை:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும்?என்றும் சிபிஐ-க்கு கேள்வி எழுப்பினர்
விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். அதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்தனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 50 ரூபாயை காட்டி ரூ.3 லட்சம் கொள்ளை.. கண் சிமிட்டும் நேரத்தில் சென்னையில் நடந்த துணிகர சம்பவம்! - chennai robbery case