சென்னை: எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள், வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக பதியப்பட்ட வழக்கில், சிறுமையின் 12ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் ஆறு மாத சம்பள பாக்ககியை பெற்ற போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை திருவான்மையூர் பகுதியில் வசித்து வந்த திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா தம்பதி, வீட்டில் பணிபுரிந்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம், அடித்தல், மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்.எல்.ஏவின் மகன் ஆண்ட்ரோ மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து அவர்களை பிடிக்க ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து பெங்களூரு, மதுரை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூர் அருகில் எம்.எல்.ஏவின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினாவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி 26ஆம் தேதி காலை எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி அல்லி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் வரும் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே தனக்கு சம்பளம் தராமல் தன்னிடம் அதிக வேலை வாங்கியதாகவும் வேலை சரியாக செய்யவில்லை என்றால் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை கிழித்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் இருந்த சிறுமியின் 12ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் ஆறு மாத சம்பள பாக்கி பணத்தை பெற்ற போலீசார் இரண்டையும் திருவான்மியூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதனை இளம் பெண் தரப்பிலிருந்து நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணிப்பெண் சித்ரவதை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் கைது!