சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும், 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 235 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக 304 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் 3,350 பேரும், நிலையான பறக்கும் படை 1,214 பேரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 48 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படிக்கும் 66 ஆயிரத்து 771 மாணவர்கள், 288 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில், முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 323 பேரும், துறை அலுவலர்கள் 330 பேரும், அறைக் கண்காணிப்பாளர்கள் 3,400 பேரும், பறக்கும் படையில் 668 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கட்டாயம் தமிழ் பாடத்தேர்வினை எழுதுவதில் இருந்து சிறுபான்மை மாெழி மாணவர்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.