சென்னை:தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்படுள்ளது.
இன்று (ஆக.31) முதல் நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இது தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவின் முதல் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஆகும். சென்னை தீவு திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகிய சாலைகளை உள்ளடக்கி மொத்தம் 3.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட சாலையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்த பந்தயம் நடைபெறும் சாலைகளில் எப்ஐஏ என்ற சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் ஒரு மணி நேரம் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் மற்றும் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பந்தயத்தை நடத்த முடியும். இந்த பந்தயத்தின் முதல் நாளன்று என்னென்ன போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்பதை பார்க்கலாம்
பயிற்சி ஆட்டங்கள்:
இன்று ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பந்தயங்கள் நடைபெற உள்ளன. பார்முலா 4, பார்முலா எல்ஜிபி 4 மற்றும் இந்திய ரேஸிங் லீக் ஆகிய மூன்று பந்தயங்களும் அடுத்தடுத்து நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் சோதனை, பயிற்சி மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.