சென்னை:18 வயதில் "World Chess Championship" பட்டத்தை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று குகேஷை பாராட்டி பேசினர்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, " தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு சென்று இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்துள்ள குகேஷ்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 18 வது வயதில் பதினெட்டாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது.
உலக அரங்கில் செஸ் போட்டி என்றாலே சென்னை தான். அதேபோல் சென்னை என்றாலே செஸ் போட்டி என மீண்டும் உறுதிப்படுத்துகின்ற வகையில் குகேஷின் சாதனை அமைந்துள்ளது.
சிறு வயதிலேயே செஸ் விளையாட்டில் அவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்த அவரது பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குகேஷின் சாதனையை அவரது பெற்றோர் எப்படி மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்களோ அதே உணர்வுடன் தான் தமிழக முதலமைச்சரும் பார்க்கிறார்.குகேஷ் வெற்றி பெற்று நாடு திரும்பியபோது, அவரது வெற்றியை தன்னுடைய வெற்றியாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்க்கு தமிழக முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கினார்.எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாத வெற்றியை தற்போது குகேஷ் பெற்று வந்துள்ளார்.