நியூ யார்க்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன்.12) நியூ யார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் தங்களது முதல் இரண்டு போட்டிகளில் முறையே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. இதில் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதல் இடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து ஜுன் 9ஆம் தேதி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக காணப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேபோல் அமெரிக்கா அணியும் நடப்பு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. தனது முந்தைய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பலமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அமெரிக்கா அணி அதிர்ச்சி அளித்தது.