ஐதராபாத்: 2024 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணி மற்றும் ஸ்பெயின் அணியின் நடுக்கள வீரர் ரோட்ரிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரியல் மேட்ரிட் அணியின் வினிஷியஸ் ஜூனியருக்கு விருது வழங்கப்படாதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.
இதன் காரணமாக ரியல் மேட்ரிட் அணி மற்றும் அந்த அணி தரப்பில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைவரும் விருது விழாவை புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் கால்பந்து உலகின் தலைப்பு செய்தியாகவும் தற்போது மாறி உள்ளது. ரசிகர்கள் பலரும் ரோட்ரிக்கு விருது வழங்கியதை எதிர்த்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பலோன் டி ஓர் விருதை வென்ற ரோட்ரி நான்கு முறை பிரீமியர் லீக் பட்டம் வென்ற வீரர் ஆவார். மேலும், 2024 யூரோ கோப்பை வென்ற வீரராகவும் இருந்தார். அதன் காரணமாக அவர் 2024 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருதை வென்றார். அதே சமயம் வினிஷியஸ் ஜூனியர் ரியல் மேட்ரிட் அணிக்காக 2024 ஆம் ஆண்டில் லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்று இருந்தார்.
அவர் அதிக கோல்கள் அடித்ததுடன், அதிக கோல் உதவிகளையும் செய்து இருந்தார். அதனால், வினிஷியஸ் ஜூனியருக்கு தான் இந்த ஆண்டுக்கான பலோன் டி ஓர் விருது அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் ஸ்பெயின் மிட் பில்டர் ரோட்ரிக்கு விருது வழங்கப்பட்டது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:90’s கிட்ஸ்களின் பேவரைட் WWE வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?