சென்னை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் மீதமிருப்பது வெறும் 5 போட்டிகள்தான். இதுவரையில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மட்டுமே தேர்வாகியுள்ளது. இதில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தான் போட்டியே.
இந்த பிளே ஆஃப் ரேசில் சென்னை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளன. எனவே, இன்னும் மீதமுள்ள 5 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் என்ன செய்யதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- வெற்றி: 7, தோல்வி: 6, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: +0.406
மீதமுள்ள போட்டிகள்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்
ஏற்கனவே குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் எலிமினேட் ஆகிவிட்டது. எனவே, இந்த இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். ஒருவேளை இந்த இரண்டு அணிகளிடமும் மிக மோசமாக தோற்றுவிட்டால், மற்ற அணிகளான பெங்களூரு, டெல்லி போன்ற அணிகளுக்கு சாதகமாக அமையும். மேலும், சன்ரைசர்ஸ் அணி இப்போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறும் பட்சத்தில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: வெற்றி: 7, தோல்வி: 6, புள்ளி: 14, நெட் ரன்ரேட்: +0.528
மீதமுள்ள போட்டிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சென்னை அணியைப் பொறுத்தவரையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தோற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு சந்தேகத்துக்குரியதாகும். ஏனென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது +0.387 நெட் ரன்ரேட்டில் உள்ளது.
சென்னை அணி தோற்றாலும் பெரிய அளவில் தோற்கக்கூடாது. 18 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்றால் சென்னைக்கு பிரச்னையே. அதுவே சென்னை முதல் பேட்டிங் செய்து, அடிக்கும் ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 18 ஓவர்களில் சேஸ் செய்ய விடக்கூடாது. அப்படி சேஸ் செய்யும்பட்சத்தில், பெங்களூரு அணியின் நெட் ரன்ரேட் கணக்கின் படி பிளே ஆஃப் வாய்ப்பை பெறும்.
டெல்லி கேபிடல்ஸ்: வெற்றி: 7, தோல்வி: 7, புள்ளி: 14, நெட் ரன்ரேட்: 0.377
டெல்லி அணிக்கு லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டது. அந்த அணி மற்ற அணிகளின் தோல்விகளுக்காக காத்திருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி - சென்னை அணியுடன் தோற்க வேண்டும். அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - குஜராத் அணிக்கு எதிராகவும், பஞ்சாப் அணிக்கு எதிராக மிக மோசமாக தோற்க வேண்டும். அது அரிதிலும் அரிது. ஒருவேளை இது நடந்தால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க:ஜிம்முக்கு போனாலும் எடை குறையலயா? கவலை வேண்டாம்.. பலன்கள் அதுக்கும் மேல! - Exercise Health Benefits