பிரான்ஸ்:அதிக எடை காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு எடை எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது. 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் கூடுதலாக 150 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
குறிப்பிட்ட போட்டிப் பிரிவுகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு எடை என்பது எவ்வளவு முக்கிய என வினேஷ் போகத் சம்பவம் தற்போது உலகிற்கு உணர்த்தி உள்ளது. அதேநேரம் உரிய எடையை எட்ட வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு துயர் துன்பங்களை சந்திக்கின்றனர் என்பதையும் தற்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு முறை சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்ததாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்து உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு போலந்தின் சிலசியனில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டார்.
48 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம், அந்த போட்டிக்கான எடையை காட்டிலும் கூடுதலாக இருந்துள்ளார். இதனால் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட மேரி கோம் 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்து அந்த போட்டியிலும் கலந்து கொண்டு உள்ளார்.
இறுதியில் அந்த போட்டியில் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தார். அந்த பதக்கம் வெல்லும் போது மேரி கோமுக்கு இரண்டு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.