தமிழ்நாடு

tamil nadu

இந்திய அணியை வழிநடத்தும் கவுதம் கம்பீர்.. இதுவரை செய்த சாதனைகள் என்ன? - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 5:47 PM IST

Gautam Gambhir: 140 கோடி மக்களின் கனவுகளை நினைவாக்க இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து நானும் என்னால் முடிந்தவற்றைச் செய்வேன் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர் (Credits - ANI)

சென்னை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று (ஜூலை 9) அறிவித்தது. இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் 2003ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அடுத்ததாக 2004ல் டெஸ்ட் போட்டிகளிலும், 2007ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இந்திய அணிக்காக டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட மூன்று வித கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கினார். இந்திய அணிக்காக சிறந்து விளங்கிய கம்பீர், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியது.

இவ்வாறு தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் அசத்தி வந்த கவுதம் கம்பீர் 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டார். அப்போது அந்த அணியில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையினால் லக்னோ அணியில் இருந்து விலகினார். இதனையடுத்து, கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நடப்பு ஆண்டில் செயல்பட்டார். இந்த ஆண்டு கொல்கத்தா ஐபிஎல் சாம்பியனாக ஆனதற்கு கவுதம் கம்பீரின் பங்கு இன்றியமையாதது.

இந்நிலையில், இந்திய அணி தலைமைப் பயிற்சியாளராக ஆனதற்கு பின் கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா எனது அடையாளம், எனது நாட்டுக்காகச் சேவை செய்வதை வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். அணியின் பயிற்சியாளர் என்பதால் வேறு விதமான தொப்பி அணிந்திருந்தாலும் இந்திய அணிக்குத் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 140 கோடி மக்களின் கனவுகளை நினைவாக்க இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து நானும் என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்" என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும், கவுதம் கம்பீரின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details