பாரீஸ்:33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்தியாவின் சார்பில் 117 வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆனால் இதுவரை 3 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 4வது பதக்கத்தை வினேஷ் போகத் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மீராபாய் சானு, கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதனால் இம்முறையும் மீராபாய் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பளு தூக்குதல் போட்டியில் ஸ்னேட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் என 2 பிரிவுகளாக நடைபெறும்.
இதன் முதலாவதாக நடைபெற்ற ஸ்னேட்ச் சுற்றில் 88 கிலோ எடையைத் தூக்கி மீரா பாய் சானுவும், தாய்லாந்தின் சுரோத்சனா கன்போவும் 3வது இடம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் & ஜெர்க் சுற்றின், முதல் வாய்ப்பில் 111 கிலோ எடையத் தூக்க முயன்ற மீராபாய் அதில் தோல்வியடைந்தார்.
இருப்பினும் 2வது வாய்ப்பில் வெற்றிகரமாக 111 கிலோ எடையைத் தூக்கி புள்ளி பட்டியலில் (199 கிலோ) 3வது இடத்திற்கு முன்னேறினார். ஆனால் ஸ்னேட்ச் சுற்றில் அவருடன் சமநிலையிலிருந்த சுரோத்சனா 112 கிலோ எடையை தூக்கினார்.
இதன் மூலம் (200 கிலோ) 3வது இடத்திலிருந்த மீராபாய் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியின் முடிவில் சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ருமேனியாவின் மிஹேலா வாலண்டினா காம்பே 205 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தாய்லாந்து வீராங்கனை சுரோத்சனா காம்போ மொத்தம் 200 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தைத் தக்கவைத்தார். இது குறித்து மீராபாய் கூறியதாவது,"நாட்டிற்காக பதக்கம் வெல்ல என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். ஆனால் இன்று அதை நிறைவேற்ற முடியவில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதி, நாம் அனைவரும் சில நேரங்களில் வெல்வோம், சில நேரங்களில் தோல்வியடைவோம். இருப்பினும் அடுத்த முறை பதக்கம் வெல்ல கடினமாக உழைப்பேன்" என்றார்.
இதையும் படிங்க:"இனி போராட சக்தியில்லை" - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்.. வெள்ளிப் பதக்கம் வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு!