தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜொலிக்கப்போகும் வித்யா ராம்ராஜ் - சுபா வெங்கடேசன்.. இதுவரை இவர்களின் சாதனைகள் என்ன? - Paris Olympics 2024

Paris Olympics 2024: தமிழ்நாட்டில் இருந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீராங்கனைகளான வித்யா ராம்ராஜ் மற்றும் சுபா வெங்கடேசன் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவுள்ள வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன்
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவுள்ள வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் (Credits - ETV Bharat Tamil Nadu, @narendramodi X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 6:39 PM IST

Updated : Jul 23, 2024, 10:17 PM IST

சென்னை:உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வருகிற ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். இவர்களில் 47 பேர் பெண்கள் ஆவர். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனைகளான வித்யா ராம்ராஜ் மற்றும் சுபா வெங்கடேசன் குறித்து விரிவாக செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

யார் இந்த வித்யா ராம்ராஜ்?

  • தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். வித்யாவின் தந்தை ஒரு டிரக் டிரைவராகவும், தாய் மீனா வீட்டு வேலையும் செய்து வருகிறார். வித்யாவின் இரட்டையரான சகோதரி நித்யாவும் தடகள வீராங்கனை ஆவார்.
  • வித்யா ஈரோட்டில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, கரூரில் தனது கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். சகோதரிகள் இருவரும் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் பெற்றோர், அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தியதால் தற்போது சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.
  • 3 முறை தேசிய பட்டத்தை வென்ற வித்யா ராம்ராஜ், சர்வதேச பதக்கங்களை பெறத் தொடங்கினார்.
  • கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400மீ பெண்கள் பிரிவு ஓட்டத்தில் வெண்கலமும் வென்று அசத்தினார்.
  • பின்னர் 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அரையிறுதியில் வென்ற வித்யா இறுதிப் போட்டிக்கு தேர்வானார்.
  • பின்னர், இறுதிப் போட்டியில் 55.42 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றார். அது மட்டுமின்றி, 39 ஆண்டுகளாக இருந்த சாதனையும் சமன் செய்தார்.

1984ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா 55.42 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் சமன் செய்து அசத்தினார். தேசிய சாதனையை வைத்துள்ள வித்யா பாரீஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கிறார்.

சுபா வெங்கடேசன்:தமிழ்நாட்டின் திருச்சி திருவெறும்பூர், அருகே உள்ள கூத்தையப்பர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் சுபா வெங்கடேசன் (24). சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுபா வெங்கடேசன், தற்போது சர்வதேச அளவில் பல பதங்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார்.

  • 2023இல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டத்திலும், மகளிர் (4*400 ) தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
  • 2024இல் பெங்களூருவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 52.34 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார்.
  • அது மட்டுமின்றி, சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் கலந்து கொண்டு 3 போட்டிகளில் வென்று பதக்கங்களையும், தேசிய அளவிலான 20 போட்டிகளில் வெற்றி பெற்று தடகளப் பிரிவில் தனி முத்திரை பதித்துள்ளார்.
  • பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார். பல தேசிய பதக்கங்களை பெற்ற சுபா வெங்டேசன் ஒலிம்பிக் பதக்க கனவோடு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.
    ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: பாய்மரப் படகு போட்டியில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர்கள் நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன்; கடந்து வந்த பாதை! - paris olympics 2024

Last Updated : Jul 23, 2024, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details