துபாய்: கிங் கோலி, ரன் மிஷன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய நட்சத்திர விராட் கோலிக்கு கடந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. இந்திய அணிக்கான அவரது பங்கு மிக பெரியது.
அவர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6 சதங்கள், 8 அரை சதங்கள் உட்பட 1,377 ரன்கள் குவித்தார். 24 ஒருநாள் இன்னிங்ஸை விளையாட அவரது பேட்டிங் சராசரி 72.47 ஆகும். அதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மட்டும் 765 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கடந்த ஆண்டு விராட் கோலி முறியடித்தார். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் என்ற விருதை ஐசிசி விராட் கோலிக்கு அறிவித்துள்ளது.
இந்த விருதுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வென்றுள்ளார்.
இந்த ஐசிசி விருது அவரது 10வது விருது ஆகும். ஒருநாள் போட்டிகளில் 4வது முறையாகும். இதற்கு முன்னதாக 2012, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், அதிக ஐசிசி விருதை பெற்ற வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
இதேபோல், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும், நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஐசிசியின் எமர்ஜிங் கிரிக்கெட்டர் என்ற விருதையும் வென்றுள்ளனர். மேலும், 2023ஆம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்ற வருதை இந்திய அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவுக்கு ஐசிசி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?