கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களுரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும், விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் 48 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து பெங்களுரூ அணி 223 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது ஓவரில் விராட் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியின் சிக்சர் எண்ணிக்கை 250ஐ கடந்தது. 35 வயதான விராட் கோலி 245 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பையும் விராட் கோலி பெற்றார்.