ஐதராபாத்:ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.8) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது.
90 தொகுதிகளில் யார் முன்னிலை?:
அரியானாவில் இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜகவும், 37 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அரியானாவில் யார் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற பதற்றம் நிலவுகிறது.
அரியானா மாநிலத்தில் உள்ள ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர் ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் தற்போதைய நிலவரப்படி முன்னிலை பெற்று வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.
வினேஷ் போகத் முன்னிலை:
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே வினேஷ் போகத் முன்னிலை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசுக்கு எதிரான விரோத மனநிலை தான் வினேஷ் போகத்தின் முன்னிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனா். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக எம்எல்ஏவாக பதவி வகிப்பார்.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டி வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த காலங்களில்:
இதையடுத்து நாடு திரும்பிய வினேஷ் போகத், ராகுல் காந்தியை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஜிந்து மாவட்டத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதியாக ஜுலானா தொகுதி காணப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில் ஜூலானா தொகுதியில் அமர்ஜித் தண்டா 61 ஆயிரத்து 942 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். பொது தொகுதியான ஜுலானாவில் மொத்தம் 15 ஆயிரத்து 561 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கடந்த 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 53 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மைதானத்தில் அத்துமீறல்! இந்திய வீராங்கனை மீதான நடவடிக்கைக்கு என்ன காரணம்?