அமெரிக்கா: ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. டெக்சாஸ் நகரில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அமெரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதிரடியாக சிக்ஸ் அடித்து தொடங்கிய ரிஸ்வான், 9 ரன்களில் நேத்ரவல்கர் பந்தில் டெய்லரின் சூப்பரான கேட்ச்சில் அவுட்டானார். அடுத்து கென்ஜிகே என்பவர் வீசிய ஓவரில் உஸ்மான் கான் 3 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த ஃபகர் சமான் 11 ரன்களுக்கு அவுட்டாக 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் திணறியது. அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், ஷதாப் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்நிலையில் ஷதாப் கான், கென்ஜிகே வீசிய பவுன்சரில் 40 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய அசாம் கான் டக் அவுட்டாக பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்து நின்றது. இந்த நேரத்தில் களமிறங்கிய இஃப்திகார் அகமது சற்று பொறுமை காட்டினார். ஆனால் பாபர் அசாம், ஜெஸ்ஸி சிங் பந்தில் 44 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி இரண்டு ஓவர்களில் ஷாகின் அஃப்ரிதி இரண்டு சிக்சர்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணிக்கு கேப்டன் மோனாங்க் படேல் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெய்லர் 12 ரன்களில் அவுட்டானார். அடுத்து படேல், கவுஸ் ஆகியோர் இணைந்து சிக்சர், பவுண்டரிகளாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த நேரத்தில் ஹரிஸ் ராஃப் வீசிய பந்தில் கவுஸ் 35 ரன்களுக்கு போல்டானார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் மோனாங்க் படேல் 50 ரன்களுக்கு, முகமது ஆமீர் பந்தில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ், நிதீஷ் குமார் ஆகியோர் அதிரடியாக விளையாடி அமெரிக்கா அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றனர்.
சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டம்:கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதீஷ் குமார் பவுண்டரி அடிக்க போட்டி டை ஆனது. இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுக்க, போட்டி முடிவை நோக்கி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 18 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் ஃபில்டிங்கில் அலட்சியம் காட்டியதால் ஓவர் த்ரோ, பவுண்டரி என அமெரிக்கா அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தது. பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், அமெரிக்கா அபாரமாக பந்து வீசியது.
சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுக்க அமெரிக்கா அணி சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் போட்டியில் அமெரிக்கா அணி கனடா அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு அமெரிக்கா அதிர்ச்சி அளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த 2022 உலகக் கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நமீபியா இலங்கை அணியையும், ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அனியையும் வென்று அதிர்ச்சி அளித்தது.
இதையும் படிங்க:மறக்க முடியாத 2007 டி20 உலகக் கோப்பை.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - ஓர் அலசல்! - T20 World Cup 2024