ஐதராபாத்: நாடு முழுவதும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவாவை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே இன்னிங்சில் முச்சதம் விளாசியுள்ளனர். போர்வோரிம் மைதானத்தில் நடைபெற்ற அருணாசல பிரதேச அணிக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் கோவா வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கோவா அணியின் சினேகல் கவுதங்கர் (Snehal Kauthankar) மற்றும் காஷ்யப் பக்லே (Kashyap Bakle) ஆகியோர் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதில் சினேகல் கவுதங்கர் 205 பந்துகளில் 300 ரன்களை கடந்து முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதேபோல் காஷ்யப் பக்லே 269 பந்துகளில் முச்சதத்தை கடந்தார். இரண்டு பேரும் சேர்ந்த பார்ட்னர்ஷிப் அமைத்து 606 ரன்கள் குவித்தனர். அதேநேரம் வெறும் 19 ரன்களில் உலக சாதனையை படைத்தனர். சர்வதேச அளவில் இலங்கை வீரரக்ள் குமார சங்கக்கரா மற்றும் மஹிலே ஜெயவர்தனே இணைந்து 625 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே சாதனையாக உள்ளது.
இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் குவித்த வீரர்கள் என்ற சாதனையை இருவரும் படைத்தனர். ஆட்ட நேர முடிவில் கோவா அணி 2 விக்கெட் இழப்புக்கு 727 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குறைந்த விக்கெட் இழப்பில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை கோவா படைத்தது.