ஹைதராபாத்: 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று (வெள்ளிக்கிழமை) கோலகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன் படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் (PBKS VS DC) அணியை எதிர்கொள்கிறது. அதே போல் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள மாற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(KKR VS SRH)அணியை எதிர் கொள்கிறது.
பஞ்சாப்-டெல்லி:ஐபிஎல் தொடர் 2024ன் இரண்டாவது போட்டி, இன்றைய நாளின் முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மகாராஜா யாதவிந்தர் சிங் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் விபத்து காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் பங்கேற்காமல் போன ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அதே போல் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடாத பஞ்சாப் அணி இந்த முறை தன்னுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதுவரை 32 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா 16 வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதே போல் இரண்டு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது.
கொல்கத்தா-ஹைதராபாத்: ஈடர் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கும் தொடங்கும் இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
அதே போல் இந்த போட்டியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் என ஆகிய இரண்டு ஆஸ்திரேலியா வீரர்களும் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளனர். அதே போல் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் திரும்பியுள்ளார்.
இதனால் அவர்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் 16 முறை கொல்கத்தா அணியும் 9 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா ஈடர் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றை போட்டியில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க:16 ஆண்டுகளாக தொடரும் சோதனை..ஆர்சிபியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!