ஐதராபாத்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பார்படோசில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு தமிழக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், "நமது இந்திய அணி 2வது முறை டி20 உலக கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலை சிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக கடைசி ஓவர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.