மதுரை:இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நாயகனுமான நடராஜன் தற்போது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் 'ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்நிலையில், மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியார் உணவக தொடக்க விழாவுக்காக நடராஜன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தமிழக கிரிக்கெட் அணியில் பல்வேறு திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் நிச்சயம் எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்பது தவறான பார்வை. அப்படி ஒருபோதும் கிடையாது. அணியில் இருக்கின்ற அனைத்து வீரர்களும் என்னை அரவணைத்துச் செல்கின்றனர்.
ஐபிஎல் போட்டிகளும் சரி, மாவட்ட அளவில் நடைபெறுகின்ற டிஎன்பிஎல் போட்டிகளும் சரி பல்வேறு திறமையான வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நானும் கூட டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாகவே ஐபிஎல் மற்றும் இந்திய அணி விளையாடும் வாய்ப்பை கிடைக்கப் பெற்றேன்.
டிஎன்பிஎல்-ஐ பொறுத்தவரை, கிராமப்புறத்தில் விளையாடுகின்ற வீரர்களுக்கும் கூட நல்ல வாய்ப்பாகும். இந்தி குறித்து அண்மையில் நான் பேசியதாக வெளிவந்த தகவல் உண்மை அல்ல. நான் எவ்வாறு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன் என ஊக்குவிக்கும் வகையில் பேசியதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டு விட்டார்கள்.