பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 5வது நாளான இன்று 50 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் ஸ்வப்னில் குசலே மற்றும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோ போட்டியிட்டனர்.
நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் முன்னிலையில் இருந்த ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 10 சுற்றுகளுக்கு பின் அடுத்தடுத்து குறிகளை தவறவிட்டார். அதேநேரம் ஆசிய சாம்பியனான ஸ்வப்னில் குசலே சிறப்பான ஷாட்டுகள் மூலம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்றில் 99 புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்த ஸ்வப்னில் குசலே, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இறுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஸ்வப்னில் குசலே 7வது இடத்தை பிடித்து 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மொத்தம் உள்ள 12 சுற்றுகளில் 197 புள்ளிகளை குவித்து இறுதி சுற்றுக்கு ஸ்வப்னில் குசலே தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்புக்கு ஸ்வப்னில் குசலே சொந்தக்காரர் ஆனார்.
அதேநேரம் மற்றொரு இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 11வது இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார். உலக தரவரிசையில் 22வது இடத்தில் இருக்கும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: லக்சயா சென் அபார வெற்றி! - Paris Olympics 2024