மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் 8 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 3 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பையின் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாடு அணி மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். முன்னதாக தேவையில்லாத காரணங்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு உள்ளூர் போட்டிகளைத் தவிர்த்த இவரை பிசிசிஐ சம்பள ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தான் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் இன்று ஸ்ரேயாஸ் ஐயர் களம் கண்டார். அப்போது தமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசினார். ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அதனை அடிக்க முயற்சித்தார்.
ஆனால் அடுத்த பந்தில் தனது ஷார்ட் பால் லென்த்தை குறைத்து வீசினார். அதைச் சரியாகக் கணித்து ஆட முடியாமல் ஸ்ரேயாஸ் ஐயர் போல்டாகி வெளியேறினார். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டார். 11 போட்டிகளில் 530 ரன்களை குவித்தார். அதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்களும் அடங்கும். அந்த உலகக் கோப்பை எடிசனில் அதிக ரன்கள் அடித்த 7 வீரர் ஆவார். மேலும், மிடில் ஆடரில் களம் இறங்கிய வீரர்களில் ஒரு உலகக் கோப்பையில் 500 ரன்களை கடந்த வீரர் இவர் தான்.
ஆனால் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கலக்கும் ஸ்ரேயாஸ், லாங் ஃபார்மேட்டில் தடுமாறி வருகிறார். கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்ஸ் விளையாடிய அவர் வெறும் 187 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 35 ரன்களே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா!