கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சனா ஜாவேத்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த திருமண அறிவிப்பின் மூலம் அவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் பிரிந்து வாழ்ந்ததாக பரவப்பட்ட செய்தி தற்போது உறுதி ஆகியுள்ளது.
முன்னதாக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சமூக வலைத்தள பக்க பதிவு ஒன்றில், "திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்களின் கடினமானதை தேர்ந்தெடுங்கள். உடல் பருமன் கடினமானது. பொருத்தமானதாக இருப்பது கடினமானது. உங்களின் கடினமானதை தேர்ந்தெடுங்கள். கடனில் இருப்பது கடினம். பொருளாதார ரீதியில் ஒழுக்கமாக இருப்பது கடினம்.
உங்களின் கடினமானதை தேர்ந்தெடுங்கள். தொடர்பு கொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது. உங்களின் கடினமானதை தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை என்பது ஒருபோதும் சுலபமானது இல்லை. அது எப்போதுமே கடினமானது. ஆனால் நம்முடைய கடினத்தை நாமே தேர்வு செய்யலாம். புத்திசாலிதனமாக தேர்வு செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்.
சோயம் மாலிக் - சானியா மிர்சா ஆகிய இருவரும் கடந்த 2010ஆம் தேதி ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு இஷான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சமிபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி பரவி வந்த நிலையில், கடந்த ஆண்டு இஷானின் பிறந்த நாளை இருவரும் சேர்ந்து கொண்டாடிய போது வதந்தி சற்றே ஓய்ந்திருந்தது.
பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் இவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதள பயோவில் மாற்றம் செய்தி கொண்டனர். இதனால் மீண்டும் அந்த செய்தி பரவ தொடங்கியது. இந்த நிலையில், சோயம் மாலிக் இன்றைய பதிவின் மூலம் அதனை உறுதி செய்துள்ளார். தற்போது சோயிப் மாலிக் - சனா ஜாவேத் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
மேலும், முன்னாள் பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக் 2021ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இவர் 287 ஒருநாள் போட்டிகள் மற்றும் 124 டி20 போட்டிகள் மற்றும் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் ஒருநாள் போட்டிகளில் 7,534 ரன்களும், டி20 போட்டிகளில் 2,435 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1898 ரன்களும் குவித்துள்ளார்.
அதேபோல் பந்து வீச்சில் 158 ஒடிஐ விக்கெட்களும், 28 டி20 விக்கெட்கள் மற்றும் 32 டெஸ்ட் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். தற்போது இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சூப்பர்மேனாக மாறிய விராட் கோலி.. ஆட்டத்தையே மாற்றிய அந்த தருணம்! வைரலாகும் வீடியோ!