பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வழக்கமாக பிரமாண்டமாக அரங்கம் அல்லது மைதானம் அமைத்து ஒலிம்பிக் தொடக்க விழா நடத்தப்படும். ஆனால் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரிஸின் மையப்பகுதியில் ஓடும் சென் நதியில் தொடங்கியது. இதனை பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஏந்திச் சென்றனர்.
இதனையடுத்து, 85 சொகுசு படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும், தங்கள் நாட்டினுடைய தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் பயணித்தது. கடைசி அணியாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் சென்றது.