பெங்களூரு:ஐபிஎல் போட்டியின் 68வது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்பதால் ரசிகர்கள் இடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்புக்குள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
முதல் மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 31 ரன்கள் எடுத்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் சற்று தடைபட்டது. அதன்பின், மழை நின்றதும் சரியாக 8.25 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் நிதானம் கலந்த அதிரடியில் விளையாடி வந்த நிலையில், விராட் கோலி 47 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, டு பிளெசிஸ் சிறுதி நேரம் அதிரடி காட்ட பெங்களூரு அணியின் ஸ்கோர் எகிறியது. பின்னர், எதிர்பாராத விதமாக டு பிளெசிஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பட்டிதார் அடித்த பந்து, பந்து வீச்சாளர் முனையில் உள்ள ஸ்டெம்பில் பட்டது. மூன்றாவது நடுவரின் ஆய்வில், பந்து சாண்ட்னர் கையில் பட்டு ஸ்டெம்பில் படுகையில் டு பிளெசிஸ் ரீச்சின் உள்ளே இல்லாததால் அவுட் என்ற முடிவு வழங்கப்பட்டுள்ளது.