ஐதராபாத்:2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ராபின் உத்தப்பா தலைமையிலான ஏழு வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஆறு வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத 2017ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணியில் மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ் மற்றும் பாரத் சிப்லி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மிகச் சிறிய அளவிலான இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா பல ஆண்டுகளாக விளையாடி வருகிறது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி மீண்டும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாட உள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் இந்த தொடர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவும் பங்கேற்க உள்ளதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மொத்தம் உள்ள 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன. தொடர்ந்து நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய அணி கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா ஐந்து முறை இந்த கோப்பையை வென்று சாதனை படைத்தது உள்ளன.
இதற்கு முன் இந்த தொடரில் சச்சின் தெண்டுல்கர், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், மகேந்திர சிங் தோனி, அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்களும் விளையாடி உள்ளனர். மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சீன மக்கள் குடியரசு தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரின் இறுதி நாளில் மகளிர் கண்காட்சி போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜாம்நகர் அரசு வாரிசாக அஜெய் ஜடேஜா அறிவிப்பு! யார் இவர்?