ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. மொத்தம் 46 வீரர்கள் 10 அணிகளில் இருந்து தக்கவைக்கப்பட்டு இருந்தனர்.
கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் கேப்டன்களையே கழற்றி அதிர்ச்சி அளித்தன. கடந்த 2024 ஐபிஎல் சீசனில் கோப்பை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் கொல்கத்தா அணியில் அவருக்கு முதன்மைத்துவம் வழங்காத காரணத்தாலே விலக நேரிட்டதாக தகவல் கூறப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக அதிரடி வீரர் ரிங்கு சிங் 13 கோடி ரூபாய் தொகைக்கு தக்கவைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆந்திரே ரஸ்செல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 12 கோடி ரூபாய் தொகைக்கு தக்கவைக்கப்பட்டனர்.
வருண் சக்கரவர்த்தி 12 கோடி ரூபாய்க்கும், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 4 கோடி ரூபாய் ஊதியத்திலும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்ச ரூபாயை மட்டுமே பெற்று வந்தார்.