ஐதராபாத்:இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியில் தொடர் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். அதேநேரம் காயம் காரணமாக மற்றொரு இந்திய வீரர் சுப்மான் கில்லும், முதலாவது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.
இதனால் அவருக்கு பதிலாக சீனியர் வீரர் புஜாரா இந்திய அணி மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் பரவியது. பெர்த் மைதானத்தில் உள்ள இந்திய அணியுடன் இணைய அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் பரவியது. இதனால் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியில் புஜாராவை பார்க்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் என்ன காரணத்திற்காக புஜாரா ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. பெர்த் மைதானத்தில் அவரை காண முடியும் ஆனால் அவர் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்ற விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.