தர்மசாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணியில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்து உள்ளார்.
அஸ்வின் 36 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் அனில் கும்பிளே 35 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில் அந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து உள்ளார். அதேபோல் 100வது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அஸ்வின், அதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர், ஒட்டுமொத்த அளவில் 5வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
இந்திய தரப்பில் அனில் கும்பிளே தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதேபோல் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகியோ தங்களது 100வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். அதேபோல் அஸ்வின் மற்றும் அனில் கும்பிளே தங்கள் கிரிக்கெட் வரலாற்றில் தலா 8 முறை 10 விக்கெட் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
36 முறை 5 விக்கெட் வீழ்த்தி உள்ள அஸ்வின் அதன்மூலம் நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை சமன் செய்து உள்ளார். ஒட்டுமொத்தமாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 67 முறை 5 விக்கெட் சாதனை நிகழ்த்தி உ உள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனின் 10 முறை 5 விக்கெட் வீழ்த்திய சாதனையையும் அஸ்வின் தற்போது சமன் செய்து உள்ளார். முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
41வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 187வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் சாதனை நிகழ்த்தினார். முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :Ind Vs Eng 5th Test: இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து! அஸ்வின் அபாரம்!