பாரிஸ்:பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த யே ஜின் கிம் 243.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அடுத்ததாக மற்றொரு தென்கொரிய வீராங்கனை கிம் 241.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று மனு பாக்கர் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் இந்தியாவிற்காக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா என ஏராளமான தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட பதிவில், "இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க கணக்கைத் தொடங்கியதற்காக மனமார்ந்த நன்றிகள். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தைக் கைப்பற்றிய வீராங்கனை மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் "இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த மனு பாக்கருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெண்கலப் பதக்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். மேலும், துப்பாக்கிச் சுடுதலில் பதக்கத்தை வெல்லும் முதல் பெண்மணி என்பது கூடுதல் சிறப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா வெளியிட்ட பதிவில் "பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றது மிகவும் பெருமைமிக்க தருணம். உங்கள் முழுத் திறமை மற்றும் அர்ப்பணிப்பை அளித்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் இந்தியாவிற்காக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனையாக உருவெடுத்துள்ளீர்கள்" என வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவிற்கு முதல் பதக்கம்! துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்திய மனு பாக்கர்!