பூஞ்சேரி, மகாபலிபுரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், '' தமிழ்நாட்டில் தன்னை விட பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை மிஞ்சுவேன்'' என சவால் விடுத்துள்ளார்.
தோனியும் தன்னை போல பீகாரி தான் என குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், ''தமிழ்நாட்டில் தன்னை விட பிரபலமான ஒரே பீகாரி தோனி தான் என்று கூறினார்.
விழாவில் ஆங்கிலத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், ''தமிழ்நாட்டில் தன்னை விட பிரபலமான ஒரே பீகாரி தோனி மட்டுமே. ஆனால், அடுத்த ஆண்டு தவெக-வின் வெற்றிக்கு பங்களித்து தோனியை விட நான் பிரபலமாக இருப்பேன். 2026 சட்டமன்ற தேர்தலில் நான் தவெக-வை வெற்றி பெறச் செய்தால், யார் அதிக பிரபலமடைவார்கள்? சென்னை சூப்பர் கிங்ஸை ஒவ்வொரு முறையும் வெல்ல வைக்கும் என் சக பீகாரி தோனியா அல்லது நானா? நான் மிஸ்டர் தோனியுடன் போட்டியிட வேண்டும். உங்கள் தலைவரின் (விஜய்) கட்சியை நான் வெற்றி பெற செய்வதற்காகவே நான் இங்கு இருக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க:கிரிக்கெட் போட்டிகளை காணவரும் வெளிநாட்டவர்களை கடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு திட்டம்?
மேலும், தமிழ் மொழியை குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், '' எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் கொஞ்சம் புரிகிறது. ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறும்போது நன்றி உரை நிகழ்த்தும் அளவுக்கு தமிழை கற்றுக்கொள்வேன். தவெக வெற்றிக்குப் பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்க போதுமான அளவு தமிழில் பேச நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
ஊழல் இல்லாத, வகுப்புவாதம் மற்றும் வாரிசு அரசியல் இல்லாத மாடல் தான் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சரியான வளர்ச்சி மாடல் என்று நான் நினைக்கிறன். இந்தியாவில் பல விஷயங்களில் பின் தங்கிய மாநிலங்கள் உள்ளன. ஆனால் அரசியல் ஊழலைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை விட மோசமான மாநிலம் என்று நான் எதையும் மதிப்பிட மாட்டேன்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற வேண்டுமானால் தொண்டர்களாகிய நீங்கள் தைரியம், இரக்கம், அர்ப்பணிப்பு ஆகிய மூன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அநீதிக்கு எதிராக நிற்கவும், ஏழை மக்களுக்கு இரக்கம் காட்டவும் உங்களுக்கு தைரியம் தேவை. அடுத்த 100 நாட்களில் நீங்கள் ஒவ்வொருவரும் (தொண்டர்கள்) கட்சியில் 10 புதிய உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என்ற உறுதி மொழியை எடுக்க வேண்டும்'' என்றார்.