டெல்லி:பார்படாசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ந்து வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி இன்று (ஜூலை.4) காலை டெல்லி திரும்பியது.
தொடர்ந்து பிரதமர் மோடியை இந்திய வீரர்கள் சந்தித்தனர். 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு விரைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்திய வீரர்கள் பிரத்யேக ஜெர்சி அணிந்திருந்தனர். வழக்கமாக அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் சாம்பியன் என்று பொறிக்கப்பட்டு இருந்த ஜெர்சியை அணிந்து கொண்டு வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். அவரும் இந்திய வீரர்களுடன் அமர்ந்து ஒன்றாக விருந்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய வீரர்கள் மீண்டும் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மும்பை செல்லும் வீரர்கள், திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த ஜூன் 29ஆம் தேதி உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் பார்படோசில் பெரில் புயல் தாக்கியதால் கடும் கனமழை கொட்டித் தீர்த்தது.
சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் போனது. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர். ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் நேற்று (ஜூலை.3) தாயகம் புறப்பட்டனர்.
இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க இந்திய வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கேக்கை இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் வெட்டிக் கொண்டாடினர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு! சிறப்பு ஜெர்சியில் தோன்றிய இந்திய வீரர்கள்! - Indian Team Meet PM Modi