மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் படிக்கல் களம் இறங்கினர்.
ஆனால், தொடக்கத்திலேயே இந்த கூட்டணியை மும்பை அணி வீழ்த்தியது. படிக்கல் டக் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஸ்டோனிஸ் சிறிது நேரம் நீடித்து ரன்களை அடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோனிஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ஹூடாவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் வந்த நிகோலஸ் பூரான், கே.எல்.ராகுலுடன் சேர்ந்து ரன்களைக் குவித்தார். அதிரடி காட்டிய இந்த கூட்டணி, லக்னோ அணியை சரிவில் இருந்து மீட்டது. ஒரு கட்டத்தில் பூரான் 75 ரன்களில் வெளியேற, அதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 55, அர்ஷத் கான் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் துஷாரா மற்றும் சாவுலா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பதோனி 22 ரன்களுடனும் மற்றும் குர்னால் பாண்டியா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பை அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - Ipl Money Making