பனிபட்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து உள்ளார் நீரஜ் சோப்ரா. அரியானா மாநிலம் பனிபட் மாவட்டம் கந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா. பாரீஸ் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றியை தொடர்ந்து, அவரது சொந்த கிராமமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தனது மகன் நாட்டுக்காக நிச்சயம் பதக்கத்தை வெல்வார் என நீரஜ் சோப்ராவின் தந்தை சுபாஷ் சோப்ரா தெரிவித்து உள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் தான் நீரஜ் சோப்ராவிடம் பேசியதாகவும் அவர் நல்ல உடல் நிலையுடன் உள்ளதால் நாட்டுக்காக நிச்சயம் ஒரு பதக்கத்தை வென்று வருவார் என்றும் சுபாஷ் சோப்ரா கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கம் வென்றார். அதேநேரம் தற்போதைய பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றிலேயே நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் உயரத்திற்கு ஈட்டி எறிந்ததால், இந்தியாவுக்காக நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.