நாக்பூர்:இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்கேற்கிறார். காயம் காரணமாக இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. இதனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றதன் மூலம் 14 மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முகமது ஷமி திரும்பினார். தற்போது இந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் ஷமிக்கு இந்த தொடர் மிக முக்கிய வாய்ந்ததாக இருக்கும். மேலும், இந்திய அணியின் பந்து வீச்சு குழுவுக்கு ஷமி தலைமை தங்குவார் எனவும் கூறப்படுகிறது.
5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கும் முகமது ஷமிக்கு மற்றொரு சாதனையும் காத்திருக்கிறது. ஒருநாள் தொடரில் 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை சமன் செய்ய ஷமிக்கு ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே தேவை. மிட்செல் ஸ்டார்க் 102 ஒருநாள் போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்திய பவுலர் ஷமி 101 ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.