லக்னோ: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.5) இரவு 7.30 மணிக்கு லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் 54வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி புது உத்வேகத்துடன் காட்சி அளிக்கிறது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும். நடப்பு தொடரில் ஏற்கனவே லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணியோ 10 போட்டிகளில் விளையாடி 6ல் வென்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள லீக் போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் லக்னோ அணி உள்ளது. அதோடு, நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு பழிவாங்கவும் முனைப்பில் லக்னோ அணி இன்று களமிறங்கும். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக விளையாடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.