வெலிங்டன்: 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் சி பிரிவில் இடம் பெற்று இருந்த கேன் வில்லியம் தலைமையிலான நியூசிலாந்து அணி தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளுடன் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததை அடுத்து நியூசிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். மேலும், 2024- 25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தையும் கேன் வில்லியம்சன் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்க தயாராக உள்ளேன். வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி அடுத்த ஓராண்டில் பல முக்கியமான போட்டிகளில் களம் காண உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், நவம்பர் மாத இறுதியில் இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட தொடர் போட்டிகளுக்கு இடையே கேன் வில்லியம்சனின் இந்த முடிவு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 743 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒயிட்பால் கிரிக்கெட்டை பொறுத்தவரை 165 ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 811 ரன்களையும், 93 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 575 ரன்களையும் கேன் வில்லியம்சன் குவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாவோ நுர்மி ஈட்டி எறிதல்: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்! - Neeraj Chopra gold medal