ஐதராபாத்:10 அணிகள் இடையிலான 9வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று (அக்.13) இரவு சார்ஜாவில் ஏ பிரிவில் நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தன. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (54 ரன்) அரைசதம் விளாசிய போதும் கடைசியில் பயனில்லாமல் போனது.
இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிரிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு சற்று மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் அதில் தலா 2 வெற்றி, மற்றும் தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது.