அபுதாபி:தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகள் இடையிலான 2 டி20 கிரிக்கெட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.29) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க ஜோடி அபாரமாக விளையாடியது. கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ராஸ் அடைர் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சவைத்து துப்பினர். அசால்ட்டாக பவுண்டரி, சிக்சர் விளாசி அதிரடி காட்டினர்.
அயர்லாந்து வீரர் சதம்:
இதனால் அயர்லாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் (52 ரன்) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராஸ் அடைர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
சதம் விளாசிய கையோடு ராஸ் அடைர் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் விளாசியது. தென் ஆப்பிரிக்க அணியில் வியன் மல்டர் 2 விக்கெட்டும், லுங்கி நிகிடி, வில்லியம்ஸ், பாட்ரிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
196 ரன்கள் இலக்கு:
தொடர்ந்து 196 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. விக்கெட் கீப்பர் ரியன் ரிக்கல்டன், ரீஸா ஹென்ட்ரிக்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. ரியன் ரிக்கல்டன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ரிஸா ஹென்ட்ரிக்சும் (51 ரன்) அரை சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். இதுவரை ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கை ஓங்கி இருந்த நிலையில் ஹென்ட்ரிக்ஸ் விக்கெட் வீழ்ந்த பின்னர் ஆட்டம் மெல்ல அயர்லாந்து பக்கம் திரும்பியது. அயர்லாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா மிடில் ஆர்டர் வரிசை சீர்குழைந்தது.
தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி:
மேத்யூ பிர்ட்ஸ்கி மட்டும் போராடிக் கொண்டு இருந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து வெளியேறினர். நீண்ட நேரம் போராடி வந்த மேத்யூ (51 ரன்) ஆட்டமிழக்க ஆட்டம் அயர்லாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடைசி இரண்டு ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன.
இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தன. இதனால் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றி வெற்றியை பதிவு செய்தது. 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை அயர்லாந்து பதிவு செய்து சாதனை படைத்தது.
வரலாறு படைத்த அயர்லாந்து:
இதுவரை மொத்தம் 7 ஆட்டங்கள் தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், அதில் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணியில் மார்க் அடைர் 4 விக்கெட்டுகளும், கிரகம் ஹூம் 3 விக்கெட்டும், பெஞ்சமீன் ஒயிட், மேத்யூ ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை அயர்லாந்து 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தது. முன்னதாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து இரு அணிகளுக்கு இடையே அக்டோபர் 2ஆம் தேதி முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பேரிடி! காலியான முக்கிய பொறுப்பு! என்ன நடந்தது? - Mohammad Yousuf resigns