தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூரு அணிக்கு பயம் காட்டிய குஜராத்.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய டிகே! - gujarat vs bengaluru - GUJARAT VS BENGALURU

GT Vs RCB: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

GT vs RCB IPL Match 2024
GT vs RCB IPL Match 2024 (Photo Credit: ETV Bharat)

By PTI

Published : May 4, 2024, 11:00 PM IST

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டம் தற்போது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 8வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால், குஜராத் அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை பறிகொடுத்தது.

விருந்தமன் சகா 1, கேப்டன் சுப்மன் கில் 2, சாய் சுதர்சன் 6 ரன்கள் என தொடக்க வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து கைகோர்த்த சாரூக் கான் - டேவிட் மில்லர் கூட்டணி சரிவில் இருந்த குஜராத் அணியை மீட்டனர். 2 சிக்சர்கள், 3 ஃபோர்கள் அடித்த மில்லர் எதிர்பாராத விதமாக கரன் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாரூக் கான் ரன் அவுட் ஆனார். 37 ரன்கள் அடித்த அவரை விராட் கோலி ரன் அவுட் செய்தார். பின்னர் ராகுல் டெவாடியா 35, ரஷித் கான் 18, விஜய் சங்கர் 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயால் மற்றும் விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். கேமரூன் கிரின் மற்றும் கரன் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது.

விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் அதிரடியால் பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 92 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய டு பிளெசிஸ் எதிர்பாராத விதமாக சாருக் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் பக்கம் ஆட்டம் சென்ற நிலையில், அதனை ஜோஸ்வா லிட்டில் சிறிது குஜராத் அணியின் பக்கம் திருப்பினார்.

வில் ஜாக்ஸ் 1, ராஜத் பட்டிதர் 2, க்ளென் மேக்ஸ்வெல் 4, கேமரூன் கிரின் 1 ரன்கள் என அடுத்தடுத்து ஜோஸ்வா லிட்டில் பந்திலும், நூர் அகமத் பந்திலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அனைவரும் ஆட்டமிழந்தாலும் மறுபக்கம் களத்தில் நின்று நம்பிக்கை அளித்த விராட் கோலியும் 42 ரன்களில் வெளியேற, கடைசி நம்பிக்கையாக ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் மாட்டுமே இருந்தார்.

பெங்களூரு அணிக்கு 40 ரன்கள் தேவையாகவும், குஜராத்திற்கு 4 விக்கெட்கள் தேவையாக இருந்த சூழலில், ரஷித் கானின் ஓவரில் 16 ரன்களை அடித்து தினேஷ் கார்த்திக் ரன்களை குறைத்தார். பின்னர் அடுத்த ஓவரில் ஸ்வப்னில் சிங் 2 ஃபோர்கள் அடிக்க முழுமையாக பெங்களூரு அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது.

13.3 ஓவர்களில் பெங்களூரு அணி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ஸ்வப்னில் சிங் 15 ரன்களும் அடித்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு அணி தற்போது 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதையும் படிங்க:"கட்டிட வேலை செய்பவர்களுக்கா வீடு சொந்தம்?" - இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர் கே.ராஜன்! - K RAJAN ABOUT ILAYARAJA

ABOUT THE AUTHOR

...view details