சென்னை:கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 17வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர்.
இதில் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ஹெட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கிளாசன் அரைசதம் விளாசிய நிலையில் சந்தீப் சர்மா பந்து வீச்சில் போல்ட் ஆனார். ஒரு பக்கம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபக்கம் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது ஹைதராபாத். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி.
தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோலர் காட் மோர் களமிறங்கினர். இதில் டாம் 10 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய எந்த வீரர்களும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதிவரை போராடிய துருவ் ஜூரெல் 35 பந்துகளில்56 ரன்களுடன் கடைசி வரை களத்திலிருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாபாஸ் அகமது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை(மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
இதையும் படிங்க:தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!