ஹராரே:இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (ஜூலை.6) நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.7) அதே ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. கேப்டன் சுப்மான் கில் (31 ரன்), வாஷிங்டன் சுந்தர் (27 ரன்), அவெஷ் கான் (16 ரன்) ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.
அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்டிங்கில் சிறப்பாக சோபிக்காதது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஜிம்பாப்வே அணியில் பந்துவீச்சாளர்கள் தெந்தை சதாரா, கேப்டன் சிக்கந்தர் ராசா ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.
முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய ஜிம்பாப்வே அணியும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் விளையாடுகின்றனர்.