டம்புலா:இலங்கையில் 9வது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் மற்றும் முர்சிதா கடுன் ஜோடி துவக்கம் தந்தது.
ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி தடுமாறி வந்தது. அடுத்தடுத்து திலாரா அக்தர் 6 ரன்களிலும், முர்சிதா கடுன் 4 ரன்களிலும், இஷ்மா தஞ்சிம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ருமானா அஹமத்தும் 1 ரன்னில் வெளியேற, வங்கதேச அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
இந்நிலையில், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா மட்டுமே தன் பங்கிற்கு 32 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.