கொழும்பு:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.2) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இலங்கை அணி நிர்ணயித்த 230 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் சமன் செய்தனர்.
இலங்கை அணியில் கேப்டன் சரித் அசலன்கா, வனிந்து ஹசரங்கா ஆகியோரின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. இருவரும் கூட்டணி அமைத்து அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். தோல்வி நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய அணியில் ஷிவம் துபே, கேஎல் ராகுல் ஆகியோரின் பேட்டிங்கால் போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆக.4) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் ஆட்டம் சமனில் முடிந்தது. இன்றைய ஆட்ட்த்தில் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி, கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயஸ் ஐயர் என நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்த போது கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சொதப்பல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இலங்கை அணியும் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர் பதுன் நிஸங்கா தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.