ஐதராபாத்:இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விருதிமான் சஹா. 2010 முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விருதிமான் சஹா விளையாடி உள்ளார். இதில் மூன்று சதம் மற்றும் ஆறு அரைசதங்களை அடித்துள்ளார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் மிகச் சிறப்பான விக்கெட் கீப்பராக திகழ்ந்து வந்தார்.
ஓய்வை அறிவித்த விரிதிமான் சஹா:
அதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஒன்பது போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் பெரிய அளவு அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை. பின்னர் ரிஷப் பன்ட் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறியதால் படிப்படியாக விருதிமான் சஹா டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
தற்போது 40 வயதாகும் அவர் தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்த தொடர்தான் தனது கடைசி தொடர் என்றும் அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்த அவர், கடைசியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இந்நிலையில் நடப்பு சீசன் ரஞ்சிக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.