ராஞ்சி: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 1 போட்டியிலும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இத்தொடரின் 4வது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.23) ராஞ்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸை பேட்டிங்குடன் தொடங்கியது. தொடக்கத்தில் இந்திய அணியின் ஆதிக்கத்தால் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில், களத்தில் நின்ற ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் சுதாரித்துக் கொண்டு அணிக்கு நிதானமான முறையில் ரன்களைச் சேர்த்தனர்.
இந்த கூட்டணி இங்கிலாந்து அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்த பின்பே பிரிந்தது. 113 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை ரவிச்சந்திரன் அஷ்வின் பிரித்தார். பென் ஃபோக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், தொடந்து சிறப்பாக விளையாடி ஜோ ரூட், தனது 31வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 302 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஒல்லி ராபின்சன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து பஷீர் மற்றும் ஜேம்ன்ஸ் அண்டர்சன் டக் ஆவுட் ஆக, இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் மட்டும் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்கள், அறிமுக வீரர் அகாஷ் தீப் 3, முகமது சிராஜ் 2 மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.