கொழும்பு:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (ஆக.2) தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிஸ்ஸங்க - பெர்னாண்டோ ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெர்னாண்டோ பெவிலியன் திரும்பிச் சென்றார். பின்னர், நிஸ்ஸங்க உடன் குசல் மெண்டிஸ் கைகோர்க்க இருவரும் விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தனர். 10 ஓவர் முடிவிற்கு 37-1 என்ற கணக்கில் விளையாடியது.
இந்நிலையில் தான் ஷிவம் துபே வீசிய பந்தில் குசல் மெண்டிஸ் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் களம் கண்ட சமரவிக்ரம சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, அசலங்கா களம் கண்டார். இந்நிலையில் தான் நிஸ்ஸங்க தனது அரை சதத்தை பதிவு செய்தார். 25 ஓவர்கள் முடிவில் 94-4 என்ற கணக்கில் அணி விளையாடியது.
சிறப்பாக விளையாடிய நிஸ்ஸங்க வாஷிங்டன் சுந்தர் வீசிய அபார பந்தைச் சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த ஜனித் லியனகே, துனித் வெல்லலகே நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். அந்த வகையில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 230 ரன்களைக் குவித்தது. இதில், துனித் வெல்லலகே 67 ரன்களும், ஹசரங்கா 24 ரன்களையும் குவித்தனர்.