ஹைதராபாத்:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் 80 ரன், கே.எல்.ராகுல் 86 ரன் மற்றும் ஜடேஜா 87 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 2 ரன், ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன், பென் ஸ்டோக்ஸ் 6 ரன், பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் என ஆட்டமிழக்க, மறுபுறம் இருந்த ஓல்லி போப் சிறப்பாக விளையாடி 196 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்களை குவித்தது.